உரிய நேரத்தில் உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி - அமைச்சர் செஞ்சி மஸ்தான்


திமுக ஒரு குடும்பம், திமுக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் குடும்பம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

கோவை,

கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் மடத்தில் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். தமிழ் செம்மொழிக்கும், ஆதினங்களின் மடங்களுக்கும் கலைஞர் வகுத்த திட்டங்கள், செய்த பணிகளை போற்றி நினைவுகூர்ந்து கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை பெற்றுக்கொள்கிறோம் என பேரூர் ஆதினம் கூறினார். தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உரிய நேரத்தில் உள்ளாட்சி துறையையும், துணை முதல்-அமைச்சர் பதவியையும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அப்போது வழங்கினார்.

உழைப்பு...உழைப்பு...உழைப்பு என்றால் அது ஸ்டாலின் தான் என கூறுவார். உழைப்புக்கு எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை, மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர்களை ஒன்று சேர்த்து திமுகவை வலுப்படுத்துகிறார். அந்த உழைப்புக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியைப்போல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பை வழங்குவார். திமுக ஒரு குடும்பம், திமுக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் குடும்பம்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா 'தம்பிமார்களே' என்று சொன்னார், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 'உடன் பிறப்புகளே' என்று சொன்னார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன்'என்று சொன்னார். திமுக குடும்பம், குடும்பமாக இருக்கும் இயக்கம். இதில் யார் உழைக்கிறார்களோ, யார் தியாகம் செய்கிறார்களோ, உண்மையாக திமுகவை நேசிக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் அதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு என்றார்.


Next Story