"நம்ம ஸ்கூல்" திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்
அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் “நம்ம ஸ்கூல்” திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பள்ளிக் கல்வித் துறை சார்பில் "நம்ம ஸ்கூல் " திட்டத்தை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்..
அதில் ,
அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த இத்திட்டத்திற்கு தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி, ``நம்ம ஸ்கூல்'' என்று தங்கிலீஷில் பெயரை வைத்து இத்திட்டத்தை மீண்டும் தொடக்கியுள்ளார் முதல்-அமைச்சர். எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக தொடங்கி வைக்கப்பட்ட, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய நிதி வசூலிக்கும் இத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் ரூ.3 கோடி செலவழிக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு, ரூ.3 கோடியை வீணடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் "நம்ம ஸ்கூல்" திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? என கூறி எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது ;
நம்ம ஸ்கூல்' திட்ட தொடக்க விழாவிற்காக ஒரேநாளில் 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என கூறுவதெல்லாம் ஆதாரமற்றது.திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ₨50 கோடி கிடைத்துள்ளதை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல்.ஓராண்டு முழுமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு, ஆய்வு கூட்டங்களுக்கும் சேர்த்தே ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு என தெரிவித்துளளார்.