தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்...!
தமிழகம் முழுவதும் 1,௦௦௦ இடங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் 1,௦௦௦ இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இன்று விடுமுறை தினம் என்பதால் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்வதற்காக ஏராளாமான மக்கள் வருகின்றனர். காய்ச்சலுடன் முகாமுக்கு வரும் பலருக்கு அது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. காய்ச்சல் அதிகமாக இருப்பவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுகாதார துணை ஊழியர்கள் அனுப்பி வைக்கின்றனர்.
அதுபோன்ற நபர்களுக்கு எந்த மாதிரியான காய்ச்சல் உள்ளது என்று பரிசோதனை செய்யப்படுகின்றது. சென்னையில் இன்று 45 இடங்களில் டெங்கு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நடைபெறும் காய்ச்சல் முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
காய்ச்சல் முகாமில் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. லேசான காய்ச்சலுடன் முகாமுக்கு வருபவர்களிடம், 2 அல்லது 3 நாட்கள் வரையில் காய்ச்சல் நீடித்தால் அதன் பின்னரும் காத்திருக்க வேண்டாம் தாமதமின்றி காய்ச்சல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.