தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில், உலக விபத்து தினத்தை முன்னிட்டு, விபத்து மற்றும் முதலுதவி கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முதலுதவி செயல்முறை விளக்கத்தினை பார்வையிட்டு விபத்து மற்றும் முதலுதவி கையேட்டினை வெளியிட்டார்.

மேலும், ராஜஸ்தான் இளைஞர் அமைப்பின் சார்பில், 'திருப்தி' எனும் திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளின் உடனிருப்போருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வையும், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

5 ஆயிரம் பேருக்கு டெங்கு

அதன்பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும், 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. அதிகபட்சமாக, 2012-ம் ஆண்டில், 66 இறப்புகளுடன் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. 2017-ம் ஆண்டில், 65 இறப்புகளுடன், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியானது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 356 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 531 பேர் தற்போது சிகிச்சை பெறுகின்றனர். நேற்று (நேற்று முன்தினம்) 43 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, டெங்கு பாதிப்புக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இவர்கள், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் 1,000 முதல் 1,500 வரை டெங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கட்டுக்குள் உள்ளது

டெங்கு பாதிப்பு வரவே வராது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு பருவமழைக்கும் வீடுகளை சுற்றி உடைந்த பானைகள், வாழை மட்டைகள், உடைந்த ஓடுகள், டயர், டியூப் போன்ற பல்வேறு பயன்பெறாத பொருட்களில் தேங்கி நிற்கும் நீரில், 'ஏடிஸ்' கொசு உருவாகி அதன்மூலம் டெங்கு பரவுகிறது.

இதை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொசு ஒழிக்கும் நடவடிக்கைகளான கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. அதனால் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story