காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிப்பு


காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2023 8:19 PM IST (Updated: 29 Jun 2023 3:43 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

நோய்த்தடுப்பு

மடத்துக்குளத்தையடுத்த கண்ணாடிப்புத்தூர் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் ஏராளமானவர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சலின் அறிகுறிகளின் அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் சுகாதாரத்துறையினர் மற்றும் பேரூராட்சி சார்பில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.முதல் கட்டமாக பொதுமக்களிடையே கொசு உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்குவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அறிகுறி தெரிந்தால் சுய வைத்தியம் செய்வதை தவிர்த்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் மாதிரி

பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆட்கள் பற்றாக்குறை, போதிய உபகரணங்கள் இல்லாமல் பேரூராட்சியின் பணிகளில் மந்தநிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நோய் பரவலைத் தவிர்க்கும் வகையில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுவாக காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணியாக கொசுக்கள் மட்டுமல்லாமல் குடிநீரும் உள்ளது. எனவே கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டிகளில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, பேரூராட்சித்தலைவர் கலைவாணி பாலமுரளி, துணைத்தலைவர் ரங்கநாதன், செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு செய்தனர்.


Next Story