சுங்க கட்டண உயர்வை கண்டித்துமாடூர், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட முயற்சி :199 பேர் கைது


சுங்க கட்டண உயர்வை கண்டித்துமாடூர், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட முயற்சி :199 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுங்க கட்டண உயர்வை கண்டித்து மாடூர், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் 199 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி, செப்.10-


சுங்க கட்டணம் உயர்வு

சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், தற்போது உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மாடூர் சுங்கச்சாவடியில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கோவி.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தள்ளுமுள்ளு

சுங்கச்சாவடி முன்பு திரண்டு வந்த அவர்கள், சுங்க கட்டணம் உயர்த்தியதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் முற்றுகையில் ஈடுபடுபவதற்காக சுங்கச்சாவடியை நோக்கி சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்துநிறுத்தினர். இதில் போலீசாருக்கும் தே.மு.தி.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றினர். இதன் மூலம் 82 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதில், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, அருணாசலம், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், மஞ்சுநாதன், இளையராஜா, நகர செயலாளர்கள் இளையராஜா, முருகன், ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பச்சமுத்து உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டை

இதேபோன்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் குழந்தைவேல் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிடுவதற்காக திரண்டு வந்தனர். முன்னதாக அவர்கள் அந்தபகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 117 பேரை கைது செய்தனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் திருமுருகன், வெங்கடேசன், திருமால், அருள், காமராஜ், மாவட்ட பொருளாளர் கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story