'கவர்னர் மாளிகை முன்பு 17-ந்தேதி சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம்' - மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


கவர்னர் மாளிகை முன்பு 17-ந்தேதி சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் - மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
x

கவர்னர் மாளிகை முன்பு வரும் 17-ந்தேதி சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மனிநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பிவைத்தார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு சுமார் 4 மாதங்கள் கழித்து அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கவர்னர் மாளிகை முன்பு வரும் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவரான எம்.எச்.ஜவாஹிருல்லா எல்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-


"ஆன்லைன் ரம்மி எனப்படும் இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத் தடுக்க தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, தலைமையில் குழு அமைத்து அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவைத் தமிழக சட்டப் பேரவை கடந்தாண்டு அக்டோபர் 19-ந்தேதி நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கவர்னர் கூறிய நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி கவர்னரை நேரில் சந்தித்து விளக்கமளித்திருந்தார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பிலுள்ள நிலையில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவைத் திருப்பி அனுப்பியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, தமிழக கவர்னரின் எதேச்சதிகார செயலைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக் கோரியும் வரும் 17-ந்தேதி கவர்னர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story