ராமேசுவரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்


ராமேசுவரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:46 PM GMT)

இலங்கை சிறைகளில் தவிக்கும் 27 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் தபால் நிலையம முன்பு நேற்ற மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து கடந்த 14-ந் தேதி மீன்பிடிக்க சென்று நடுக்கடலில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 27 மீனவர்களையும், அவர்களது 5 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை கோரி ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பாக அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமை தாங்கினார்.

மேலும் கடந்த 2018 முதல் தற்போது வரையிலும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு அரசுடைமையாக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகு, நாட்டுப்படகுகளை மீட்டு தரக்கோரியும், இலங்கை கடற்படை கப்பல்களால் மோதி மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரெயில் மறியல்

விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, எமரிட், சகாயம், மகத்துவம், ம.தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக், மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் கராத்தே பழனிசாமி, காங்கிரஸ் தேசிய மீனவர் அணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கண் இளங்கோ மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

27 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படாவிட்டால் நவம்பர் 3-ந் தேதி மண்டபத்தில் ரெயில் மறியல் நடத்தப்படும் எனவும், இதில், அனைத்து மீனவர்களும், பல்வேறு சங்கத்தினரும் திரளாக கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.


Next Story