எண்ணும்-எழுத்தும் பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணும்-எழுத்தும் பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணும்-எழுத்தும் பயிற்சி
பள்ளி கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2-ம் பருவத்திற்கான எண்ணும்-எழுத்தும் பயிற்சி கடந்த 3-ந்தேதியும், நேற்று முன்தினமும் நடந்தது.
அதனை தொடர்ந்து 4, 5-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2-ம் பருவத்திற்கான எண்ணும்-எழுத்து பயிற்சி நேற்று தொடங்கியது. அதன்படி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு பெரம்பலூர் சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு பாடாலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், வேப்பூர் ஒன்றியத்துக்கு வேப்பூர் வட்டார கல்வி அலுவலகத்திலும் எண்ணும்-எழுத்தும் பயிற்சி நடந்தது.
ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஒருங்கிணைத்து பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், பயிற்சியில் எடுத்து கொண்ட செயல்பாடுகளை பள்ளியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று ஆசிரியர்களுக்கு விரிவாக எடுத்து கூறினர். இந்த நிலையில் சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்கள் ஆகியோரை கைது செய்த போலீசாரையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசையும் கண்டித்தும் எண்ணும்-எழுத்தும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டணி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. அப்போது அவர்கள் போலீசாரையும், தமிழக அரசையும் கண்டித்தும், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து பயிற்சி வகுப்புக்கு சென்றனர். அந்த ஆசிரியர்களுக்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) எண்ணும்-எழுத்தும் பயிற்சி நிறைவடைகிறது.