பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். அதேபோல் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்கு முழுநேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனை கண்டித்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட பொருளாளர் ரூசோ தலைமை தாங்கினார். இதில் கரூர் ஒன்றிய பொறுப்பாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் க.பரமத்தியில் வட்டாரத்தலைவர் வாசுதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.