அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அகவிலைப்படி 4 சதவீதம், முடக்கப்பட்ட 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும். தமிழக அரசின் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் தலைமை தாங்கி பேசினார். கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.