ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலை, பலமநேர் நெடுஞ்சாலை, பாலிடெக்னிக் கூட்ரோடு, விநாயகபுரம், செதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகக்கூறி, குடியாத்தம் நெடுஞ்சாலை துறையை கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க செயலாளர் எம்.வினாயகம் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. வேலூர் மாவட்ட ஆட்டோ சங்க செயலாளர் டி.முரளி தொடங்கி வைத்தார், வழக்கறிஞர் சு.சம்பத்குமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்லபாண்டியன், ஆட்டோ ஓட்டுனர் சங்க பொருளாளர் ராமு உள்பட ஏராளமானோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நெடுஞ்சாலைத்துறை குடியாத்தம் நகரில் உள்ள முக்கியமான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமான முறையில் அகற்றுவதால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், முறையாக அளவீடு செய்து நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி அதன் பின்னரே சாலைகளை அமைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் ஆட்டோ நிறுத்த தலைவர் கே.பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.