ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆதித்தமிழர் கட்சியினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நிறுவன தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி செயலாளர் தமிழரசி, மாவட்ட தலைவர் சங்கர், துணைத்தலைவர் இளையராஜா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை அவருடைய தங்கை மீது தாக்குதல் நடந்ததை கண்டித்தும், திசையன்விளை பகுதியில் அருந்ததியர் முத்தையா கொலை செய்யப்பட்டதை ஆணவக்கொலை வழக்காக எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும். பள்ளி கல்லூரிகளில் தொடரும் தலித் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பச்சைத்தமிழகம் கட்சித்தலைவர் சுப.உதயகுமார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் துரைபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முத்துவளவன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், ஆதித்தமிழர் கட்சி மகளிர் அணி தலைவர் முத்துமாரி, மாவட்ட ஆலோசகர் சந்தன மாரியம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.