தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் இத்ரீஸ் மற்றும் அக்ஸா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 5 வயது சிறுவன் அஹமது ஆகியோரை வெறிநாய்கள் கொடூரமாக கடித்து தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் அன்வர் சாதிக், மாவட்ட துணை தலைவர் செங்கோட்டை ஹாஜா, செயலாளர்கள் ஜலாலுதீன், பிலால், பீர்முகமது, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநிலச் செயலாளர் முகம்மது ஒலி, மாநில துணை பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அனைத்து கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமான ஆண்கள் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். மாவட்ட தொண்டரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.