நந்திவரத்தில் பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் இடித்து அகற்றம்; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நந்திவரத்தில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடத்தில் சமூக விரோதிகள் நடமாடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் இடித்து அகற்றப்பட்டது.
கட்டிடங்கள் பழுது
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய ஆஸ்பத்திரி கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்பட்டன. இந்தப் பழுதடைந்த கட்டிடத்தில் மர்மநபர்கள் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் கால்நடை துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் இடத்தில் 4 ஏக்கர் நிலத்தை நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு அரசு ஒதுக்கி உள்ளது. இதனையடுத்து நகராட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் இருந்த பழுதடைந்த பழைய கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் இருந்ததால் அதனை நேற்று நகராட்சி நிர்வாகம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி கூறியதாவது:- கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அறிவுசார்ந்த டிஜிட்டல் நூலகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. மிக விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- நந்திவரத்தில் கால்நடை ஆஸ்பத்திரிக்கு 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே உள்ளது. தினமும் ஏராளமான கால்நடைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே கால்நடை ஆஸ்பத்திரிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.