தாம்பரம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் தள்ளுமுள்ளு


தாம்பரம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் தள்ளுமுள்ளு
x

தாம்பரம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை

சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 137 வீடுகளில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.

இந்த பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி‌ சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் வீடுகளை காலி செய்யும்படி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த ஐகோர்ட்டு, வருகிற 11-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டது.

இதையடுத்து தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் தாசில்தார் கவிதா மற்றும் வருவாய் துறையினர் மதுரப்பாக்கம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற‌ பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். இதற்காக பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க வருவாய்த் துறைக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி வீடுகளை அகற்ற‌ முயன்றபோது மதுரபாக்கம் ஊராட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன், துணை தலைவர் புருஷோத்தமன் உள்பட ஏராளமானவர்கள் அவகாசம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.

இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, "வீடுகள் அகற்றப்பட்ட இருளர் பகுதியை சேர்ந்த 27 பேருக்கு அகரம் பகுதியில் நிலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.


Next Story