தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக ஜனநாயக கட்சிகள் குரல் கொடுக்கவில்லை
தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக ஜனநாயக கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்று சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிதம்பரம்,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் வன்னியரசு, பொது செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், தமிழ் தேசிய விடுதலைக்கான பாவணர் அறிவுமதி, மாவட்ட செயலாளர்கள் பால.அறவாழி, முல்லைவேந்தன், துரை மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
தமிழீழ இனப்படுகொலை கடந்த 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது. மே 17-ந் தேதி அன்று விடுதலை புலிகள் முன்னணி தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள். தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்தார்.
போர்க்களத்தில் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் வீரமரணம் அடைந்தார்கள். எனவே மே 17-ந்தேதியை நினைவு கூற வேண்டிய பொறுப்பு தமிழ் சமூகத்திற்கும் இருக்கிறது.
உடன்பாடு இல்லை
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் திரும்ப வருவார் என்ற கருத்துக்கள் இன்னும் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு பரப்பப்படும் கருத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு உடன்பாடு இல்லை.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் எங்கள் சாதியினா் இல்லை. அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைக்கக்கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்துங்கள், உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு வலியுறுத்திய கட்சி தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
ஜனநாயக கட்சிகள் குரல் கொடுக்கவில்லை
இனப்படுகொலை பல நாடுகளில் நடைபெறுகிறது. இனப்படுகொலைக்கு எதிராக ஜனநாயக கட்சிகள் குரல் கொடுத்துள்ளார்கள். ஆனால் தமிழீழ இடத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக எந்த ஜனநாயக கட்சியும் குரல் கொடுக்கவில்லை. இனப்படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடந்தது. ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் ஒரு மனித உரிமை அமைப்புகள் கூட இனப்படுகொலைக்காக போராட்டம் நடத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி செயலாளர் செல்லப்பன், புவனகிரி தொகுதி துணை செயலாளர் மராந்தூர் ராஜேஷ், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் யாழ் திலீபன், ஒன்றிய செயலாளர்கள் சந்தனகுமார், கமல்ராஜ், இளம்வழுதி, பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் சிவகுமார், சிதம்பரம் நகர இணை செயலாளர் சரித்திரன், வி.சி.க. பிரமுகா் பரசு முருகையன், காட்டுமன்னார்கோவில் மேற்கு ஒன்றிய அமைப்பாளர் என்ஜினீயர் ராம்சுந்தர், கடலூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி இயக்க மாவட்ட துணை செயலாளர் நந்தினி ராம்சுந்தர், திருமாநந்தன், மாவட்ட துணை செயலாளர் செல்வ செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முள்ளி வாய்க்கால் நினைவு தின ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது.