விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்


விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - சசிகலா வலியுறுத்தல்
x

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் சசிகலா வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டிசுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி தொடர்ந்து ஒன்பதாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

ஆண்டிப்பட்டி அருகே டி. சுப்புலாபுரம் கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இத்தொழிலை சார்ந்துள்ள 3000 க்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஆக மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் இந்த பகுதியில் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளாக புதிய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால், ஊதிய உயர்வு கோரி விசைத்தறி நல வாரியத்தில் உள்ள தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

திமுக தலைமையிலான அரசோ விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு காணாமல், அவர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே கொரோனா போன்ற பிரச்சனைகளால் விசைத்தறி தொழிலும் மிகவும் நலிவடைந்துள்ளது.

போதாக்குறைக்கு திமுக தலைமையிலான அரசு மின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியதால் விசைத்தறி தொழில் நிறுவனங்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வேட்டி, சேலை உற்பத்தியும் பாதிப்பு அடைந்துள்ளது.

மேலும் நாளுக்கு நாள் வாட்டி வதைக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல வழி தெரியாமல் விசைத்தறி நெசவாளர்கள் திக்கு முக்காடி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. இவையெல்லாம் இந்த ஆட்சியாளர்களின் நிர்வாக திறைமையின்மையைத்தான் காட்டுகிறது.

எனவே, திமுக தலைமையிலான அரசு, விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற செய்து ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் எதிர்வரும் பொங்கல் திருநாளை சந்தோசமாக கொண்டாட காத்துகொண்டு இருக்கும் சூழலில், விசைத்தறி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றிடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Next Story