டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: போடி அருகே பரபரப்பு
போடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றகோரி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. கல்லூரியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவிகள் விடுதி கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயும், மாணவர்கள் விடுதி கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மாணவர் விடுதியில் 400-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
இந்த விடுதிக்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வருபவர்கள் மாணவர் விடுதி செல்லும் சாலையில் அமர்ந்து தினமும் மது அருந்துகின்றனர். அப்போது சாலையில் நடந்து வரும் மாணவர்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவர் நடந்து சென்றார்.
மாணவர் மீது தாக்குதல்
அப்போது மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அந்த மாணவனிடம் தகராறு செய்து தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மாணவர்கள் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் கல்லூரி முன்பு, தங்கும் விடுதி மாணவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதியில் உணவு தரமானதாக இல்லை, கழிப்பறைகள் சரியாக இல்லை, விடுதிக்கு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் இல்லை, விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், போடி நகர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக எழுதி கொடுங்கள் என கூறினர். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
போராட்டம்
இதற்கிடையே போடி தாசில்தார் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதைத்தொடர்ந்து அங்கு வந்த மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர், விடுதிக்கு செல்லும் சாலையில் உடனடியாக தெரு விளக்குகள் அமைத்து தருவதாகவும், டாஸ்மாக் கடையை மாற்ற ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
போடி தாசில்தார் மாணவர்களிடம் உங்களது குறைகள் உடனடியாக சரி செய்யப்படும், தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.