அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரிக்கை
அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில குழு உறுப்பினர் சாமி நடராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரண தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் தொடர் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரவி வரும் காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.