ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்லக்குடி:
ரெயில்வே சுரங்கப்பாதை
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த புதூர்பாளையம் ஊராட்சியில் புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம் என 2 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு அருகே கல்லக்குடி பேரூராட்சி உள்ளது. புதூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் அடிப்படை தேவைகளுக்கும், கல்லக்குடியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாக பணிபுரிவதற்கும், மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கும் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானவர்கள் கல்லக்குடி வந்து செல்கின்றனர். மேலும் இந்த கிராமம் வழியாக ஆலம்பாக்கம், விரகாலூர், திண்ணகுளம், குலமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதி மக்கள் தினமும் கல்லக்குடி வந்து செல்கின்றனர். இந்நிலையில் புதூர்பாளையம்-கல்லக்குடி கிராமங்களுக்கு இடையே உள்ள தார் சாலையில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இப்பகுதி மக்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வந்த நிலையில், அதை தவிர்க்க தற்போது ெரயில்வே கேட்டிற்கு கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
மழைநீரை அகற்ற வேண்டும்
ஆனால் தற்போது பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மீட்டர் அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக மருத்துவமனைக்கு ெசல்லவோ வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு மோட்டார் வைத்து சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்றும், தொடர்ந்து மழைநீர் தேங்காத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.