மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி இழப்பீடு வழங்க கோரிக்கை
தேவகோட்டை அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் பலியானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் பலியானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.
3 மாடுகள் பலி
தேவகோட்டை அருகே உள்ள சருகனி ஊராட்சி நாகமதி கிராமத்தை சேர்ந்தவர் மணவாளன். விவசாயியான இவர் 3 பசுமாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேவகோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. விவசாயி மணவாளன் மேய்ச்சலுக்கு சென்ற 3 மாடுகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டின் முன்பு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் பலத்த மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் 3 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இதுகுறித்து தேவகோட்டை தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் அந்த கிராம நிர்வாக அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மணவாளன் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்துக்கு வாழ்வாதாரமாக இருந்த 3 பசுமாடுகளும் மின்னல் தாக்கியதில் இறந்து விட்டன. பசுமாடுகளின் பாலை கறந்து பிழைப்பு நடத்தி வந்தேன். தற்போது மாடுகள் இறந்து விட்டதால் குடும்பத்தினரை எப்படி பாதுகாப்பது என ெதரியாமல் தவித்து வருகிறேன். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.