நிதிஷ்குமாரை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் வெளியேறுவார் - பிப்லப் குமார்
'தி.மு.க. - காங்கிரஸ் இடையே நடப்பது குடும்ப பேச்சுவார்த்தை' என்று திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் குற்றம் சாட்டினார்.
சென்னை,
சென்னை, தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகமான கமலாலயத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் 2-ம் கட்ட பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் கலந்துகொண்டார்.
பயிற்சி முகாமில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்து செல்வது குறித்தும், தொழில் முனைவோரை இந்த திட்டத்தில் இணைப்பது தொடர்பான அறிவுரைகளையும் பிப்லப் குமார் தேப் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிப்லப் குமார் தேப், "தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் விஸ்வகர்மா திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு இதனை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இருக்கிறது. தமிழகத்தில் மக்களாட்சி நடக்கவில்லை குடும்பத்தின் ஆட்சிதான் நடக்கிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை, அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இல்லை. அது இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மட்டும்தான்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. குடும்பத்திற்கும், காங்கிரஸ் குடும்பத்திற்கும்தான் கூட்டணி. தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அண்ணாமலையின் கீழ் நன்றாக உள்ளது. தி.மு.க.வில் வாரிசுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும். ஆனால் பா.ஜ.க.வில் நாளைக்கே கூட ஒரு சாதாரண தொண்டன் முதல்-அமைச்சர் ஆக முடியும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி ஆட்சியை பிடிக்கும்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரைத் தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவார். பீகார் மாநிலத்தில் தற்போது நடைபெறுவது வெறும் டிரைலர்தான்" என்று அவர் கூறினார்.