காகாபாளையத்தில் காலதாமதமாகும் மேம்பாலம் கட்டும் பணி-விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி காலதாமதமாகி வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேலம்

அடிக்கடி விபத்து

சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் காகாபாளையம் உள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரில், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேம்படிதாளம், காகாபாளையம், ராக்கிப்பட்டி, அய்யம்பாளையம், நடுவனேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்களும், அதன் மூலம் நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியல், உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்பிறகு காகாபாளையம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

மேம்பால பணி

இந்த உயர்மட்ட மேம்பாலமானது சேலத்தில் இருந்து 16-வது கிலோ மீட்டரில் செல்லியம்பாளையம்-கனககிரி ஏரி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பாலம் அமைக்கும் பணி காரணமாக இந்த பகுதியில் இணைப்பு சாலை வழியாக தான், ஈரோடு, கோவை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து நிலவுவதை காணமுடியும். ஆனால் காலை மற்றும் மாலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த மேம்பால பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் காலக்கெடு முடிந்து ஓராண்டு ஆகியும் மேம்பால பணிகள் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகவும், எனவே, காலதாமதமாகும் இந்த பணிகளை விரைந்து முடித்து விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்களை காண்போம்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து வேம்படிதாளத்தை சேர்ந்த கருணாநிதி கூறும் போது, 'சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிதாளம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் இன்னும் பணிகள் முடியவில்லை. அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இவர்கள் சாலையை கடந்து செல்லும்போது, விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வந்தது. அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. எனவே, இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

போக்குவரத்து நெரிசல்

திருவல்லிபட்டி பகுதியை சேர்ந்த பூபதி கூறும் போது, 'வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எனது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் நான் தான் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு செல்வேன். ஏனென்றால் சாலையை கடக்க முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. வேம்படிதாளம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி கூடங்களும், அங்கு ஆயிரக்கணக்கான தறி தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். தினமும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். எனவே, தாமதமாக நடக்கும் மேம்பால பணியை விரைந்து முடித்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

மண் கிடைப்பதில் சிக்கல்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காகாபாளையம் பகுதியில் நடந்து வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.



Next Story