ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு விவகாரத்தில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா?- நீதிபதி அதிருப்தி


ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு விவகாரத்தில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா?- நீதிபதி அதிருப்தி
x

ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மதுரை


ராணுவ வீரர்கள் ஆள்சேர்ப்பு விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தவறான தகவல்களை தரலாமா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ராணுவ வீரர் பணியிடம்

நெல்லை மாவட்டதை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி ராணுவ வீரர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றோம். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டன. அதில் 22 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் எங்களது பெயர் இடம்பெறவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, காலியிடங்கள் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பில் சம்பந்தப்பட்ட பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற விவரம் இல்லை. இது சட்டவிரோதமாகும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு விதிகளை பின்பற்றி முறையாக மீண்டும் அறிவிப்பு செய்து ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு கடந்த 2019-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீசு அனுப்பி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அறிக்கை சமர்ப்பிப்பு

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் சீலிடப்பட்ட கவர் ஒன்றை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

அதனை படித்து பார்த்த நீதிபதி, மத்திய அரசு வக்கீல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள தகவல்கள் அனைத்தும் தவறானவை. தவறான தகவல்களை சீலிடப்பட்ட கவரில் கொடுத்துள்ளீர்கள். அதிகாரிகள் கொடுக்கும் பெரும்பாலான தகவல்கள் தவறாகத்தான் உள்ளன. கோர்ட்டுக்கு கூட சரியான தகவல்களை தருவதில்லை என்றார். அதற்கு கம்ப்யூட்டரில் பதிவான தகவல்களை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளதாகவும், நாடு முழுவம் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் வக்கீல் தெரிவித்தார்.

தவறான தகவல்களை தரலாமா?

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளே இவ்வாறு தவறான தகவல்களை கோர்ட்டுக்கு தரலாமா? நீங்கள் கொடுக்கும் தகவல்களே தவறாக இருந்தால் நாட்டின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும்? எனவும் நீதிபதி தெரிவித்தார். பின்னர், உங்களின் வழிமுறையே சரியில்லை என்று அதிருப்தி தெரிவித்ததுடன், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


Next Story