அவதூறு வழக்கில்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ந்தேதி ஆஜராக வேண்டும் -கோர்ட்டு உத்தரவு


அவதூறு வழக்கில்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ந்தேதி ஆஜராக வேண்டும் -கோர்ட்டு உத்தரவு
x

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜூலை 14-ந்தேதி ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆலந்தூர்,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி தி.மு.க பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த நிலையில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும், மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார். எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில் 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை.

நேரில் ஆஜராக உத்தரவு

பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். கடந்த 9-ந்தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமுலம் அளித்தார்.

இந்த நிலையில் மனு மீதான விசாரணை 17-வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் ஜூலை மாதம் 14-ந்தேதி அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story