ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து..!


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து..!
x

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக பேசியதாக அப்போதைய தமிழக அரசு சார்பில் திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தார்.

அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், ஏற்கனவே திருச்சியில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்த அந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி கே.பாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தொடரப்பட்ட மேற்படி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story