அவதூறு வழக்கு: சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு


அவதூறு வழக்கு: சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
x

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்குகளில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது

சென்னை,

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் விவகாரம், கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களில் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

இது தொடர்பாக அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி முதல்வரை தாக்கியோ, நேரடியாகவோ பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப்பெறும்போது, தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும் என வாதிட்டார். அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார்.

அப்போது நீதிபதி, அரசை விமர்சித்தும் அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசின் மீதும் முதல்வர் மீதும் நேரடி தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், எப்படி அவதூறு கருத்து இல்லை என குறிப்பிட முடியும் என வாதங்கள் வைத்தார் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நான்கு வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


Next Story