நாய்கள் கடித்ததில் மான் பலி
திருச்சுழி அருகே நாய்கள் கடித்ததில் மான் பலியானது.
காரியாபட்டி,
திருச்சுழி குண்டாற்று பகுதியில் அடர்ந்த முள் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. பல நேரங்களில் மான்கள் வழிதவறியோ அல்லது தண்ணீர் தேடியோ ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. இந்தநிலையில் திருச்சுழி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஆண் புள்ளிமான் ஒன்று வழி தவறி ஊருக்குள் வந்தது. இதனை தெரு நாய்கள் விரட்டி கடித்ததில் புள்ளிமான் குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர், வனத்துறையினர் வீட்டிக்குள் புகுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். நாய்கள் துரத்தி கடித்ததில் காயமடைந்த புள்ளிமானிற்கு திருச்சுழி கால்நடை மருத்துவர் சுனிதா தலைமையிலான கால்நடை மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மான் உயிரிழந்தது.