விளை நிலங்களுக்குள் மான், காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க வேண்டும்


விளை நிலங்களுக்குள் மான், காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க வேண்டும்
x

விளை நிலங்களுக்குள் மான், காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க இரும்பு கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

விளை நிலங்களுக்குள் மான், காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க இரும்பு கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயம்

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாக திகழ்கிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறி, அரிசி, வாழை உள்ளிட்டவை பல்வேறு மாவட்டங்களுக்கும், பிறமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருவண்ணாமலை நகரை ஒட்டியவாறும், கிரிவலப்பாதையிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மகா தீப மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது அடி அண்ணாமலை பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து பகுதியில் விவசாயத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

மகா தீப மலையின் அடிவாரத்தில் வருணலிங்கம் எதிர்புறம் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இப்பகுதியில் நெல், பூ வகைகள், வாழை, மிளகாய், கால்நடை தீவனப் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த தீப மலையில் மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றிகள் உள்ளன. இந்த விலங்குகள் உணவு, தண்ணீரை தேடி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்துக்குள் நுழைகிறது. அவ்வாறு வரும் விலங்குகளால் பயிர்கள் சேதமாவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். விளை நிலங்களுக்குள் வரும் விலங்குகளை தடுக்க முடியாமல் அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இரும்பு வேலிகள்

சாமந்தி, முல்லை, மல்லி, கோழிக்கொண்டை பூக்கள் அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்த பூக்கள் மான்களுக்கு இறையாகி வருகிறது. இரவு நேரங்களில் நிலத்துக்குள் வரும் மான்கள் பூக்களை உணவாக உட்கொள்கின்றன. மேலும் அங்கு சோளம் உள்ளிட்ட கால்நடைகளுக்கான தீவன பயிர், வேர்க்கடலை, வாழை விளைவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை காட்டுப்பன்றிகள் நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக மலை அடிவாரத்தில் இரும்பு கம்பிகள் மூலம் வேலி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை வனத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆனால் அங்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-


தீபபிரியன்:- இந்த பகுதியில் விவசாயத்தை நம்பி 100-க்கும் அதிகமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்களை சந்தைப்படுத்தினால் மட்டுமே அடுத்த முறை எங்களால் விளைவிக்க முடியும். ஆனால் விளை பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை உள்ளது. மலையில் இருந்து வரும் மான்கள் பூக்களை கடித்து தின்கிறது. செடிகளையும் மிதித்து விடுகிறது. எனவே பூக்களை பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும்



வெங்கடேசன்:- திருவண்ணாமலை தீப மலையில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகிறது. அந்த மான்கள் எங்கள் நிலத்தின் வழியாக தான் தண்ணீர் தேடி ஊருக்குள் செல்கிறது. செல்லும் வழியில் எங்களது பயிர்களை மேய்ந்து விடுகிறது. இரவில் தான் அதிகப்படியான மான்களும், காட்டுப்பன்றிகளும் வருகிறது. அவைகளை எத்தனை முறை விரட்டினாலும் திரும்ப, திரும்ப நிலத்துக்குள் வருகிறது. பயிர்களை பாதுகாக்க பல நாட்கள் இரவு தூக்கத்தை தொலைத்துள்ளோம். அவ்வாறு வரும் பகுதியில் இரும்பு கம்பியால் வேலி அமைக்க வேண்டும்.

சங்கர்:-


தற்போது நாங்கள் சாமந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூ வகைகள் மற்றும் கால்நடை தீவன பயிர்களை பயிரிட்டுள்ளோம். அறுவடை காலம் நெருங்கிவிட்டது. இந்த பூக்களை பறித்து திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு விற்பனை செய்ய உள்ளோம்.

இந்த நிலையில் கோடை காலம் வந்துவிட்டதால் தீப மலையில் உள்ள ஊற்றுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே தண்ணீருக்ககாவும், உணவுக்காகவும் நிலங்களுக்குள் மான், காட்டுப்பன்றிகள் வருகிறது. தீப மலையின் அடிவாரத்தில் பல இடங்களில் இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அடி அண்ணாமலை பகுதியில் வேலி அமைக்கப்படவில்லை. எனவே கசம்குட்டை பகுதியில் இருந்து பச்சையம்மன் கோவில் வரை இரும்பு கம்பி வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலங்குகள் வராமல் தடுக்க இரும்பு கம்பியால் வேலி அமைப்பதுடன், வனப்பகுதிக்குள் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story