பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் சரிவு


பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் சரிவு
x

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் சரிந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் சரிந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

அணைகளில் நீர்மட்டம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றன. மேலும் இந்த அணைகள் மூலம் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், போதிய மழை இல்லாததாலும் அணைகளுக்கான நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது.

சுமார் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய, உச்ச நீர்மட்டம் 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் தற்போது 44.98 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. நீர்மட்டம் 50 அடிக்கு கீழே சென்றதால் இந்த அணையில் இருந்து மின்சார தேவைக்காக நீர் எடுக்க முடியாத காரணத்தினால் தற்போது சேர்வலாறு அணையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை.

மின் உற்பத்தி பாதிப்பு

இதேபோன்று உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 27.90 அடியாக இருக்கும் நிலையில் 254.75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் லோயர் கேம்ப் வழியாக சென்று மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இவ்வாறு 4 விசையாழிகள் வழியாக அதிகபட்சமாக சுமார் 32 மெகவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய நிலையில், பொதுப்பணித்துறையினர் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக ஆற்றில் திறந்துவிடப்படும் நீரை பொறுத்து மின்சாரம் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 250 கனஅடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டு உள்ளதால் சுமார் 5 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story