கடன் மேளா
நாகை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் கடன் மேளா நாளை நடக்கிறது.
கூட்டுறவு சங்க நாகை மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நாகை மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் கடன் மேளா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடக்கும் இந்த கடன் மேளாவில் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், வட்டியில்லா மீனவர் கடன், வட்டியில்லா மாற்றுத்திறனாளிகள் கடன் உள்ளிட்ட ரூ.15 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதில் வைப்புத்தொகை திரட்டுதல், பல்வேறு வகையான கடன் மனுக்கள் பெறுதல், புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மத்திய கூட்டுறவு வங்கியின் தொழில் நுட்ப சேவைகளை விளம்பரப்படுத்துவது ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. எனவே கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.