சட்டவிரோத காவலில் இருந்தபோது சாவு:வாலிபர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சட்டவிரோத காவலில் இருந்தபோது சாவு:வாலிபர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சட்டவிரோத போலீஸ் காவலில் இருந்த வாலிபர் இறந்ததால், அவரது குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


சட்டவிரோத போலீஸ் காவலில் இருந்த வாலிபர் இறந்ததால், அவரது குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வாலிபர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த எமனேசுவரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது சகோதரர் வெங்கடேசன். இவர் தனது மனைவி உடன் வசித்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டில் இவர் மீது பொய்யாக நகை திருட்டு வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க போலீசார் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.

2012-ம் ஆண்டில் வெங்கடேசனை எமனேசுவரம் போலீசார் சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் போலீஸ் நிலையத்திலேயே அவர் இறந்தார்.

போலீசார் மீது நடவடிக்கை

அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலில், பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவரது இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். என் சகோதரர் இறப்புக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, ஏற்கனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. வெங்கடேசனின் இறப்புக்காக முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிவாரண நிதியை அவரது தாயாரிடம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

ரூ.30 லட்சம் இழப்பீடு

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் சகோதரர் சட்டவிரோத காவலில் இறந்ததற்காக ரூ.30 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசின் உள்துறை அதிகாரிகள் 2 மாதத்தில் வழங்க வேண்டும். அந்த தொகையை வெங்கடேசனின் தாயார், மனைவி, மகன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வீதம் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story