பெண்ணுக்கு கொலை மிரட்டல்
மாணவிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். 2 மாணவிகளும் ஒன்றாக சைக்கிளில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று 2 மாணவிகளும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர். ஊருக்கு அருகே வந்த போது, செட்டிமேட்டை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் மகேஷ், சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கண்ணன் ஆகியோர் மாணவிகளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதையறிந்த ஒரு மாணவியின் தாயாரான ஷிபா (37) அங்கு சென்று இருவரையும் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மகேஷ், கண்ணன் ஆகியோர் ஷிபாவை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஷ், கண்ணனை தேடி வருகின்றனர்.