அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளம் கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் மகன் சுரேஷ் (வயது 26). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (49). இவர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 13-7-2022 அன்று தச்சநல்லூர் பகுதியில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சுரேஷ், ஸ்ரீரங்கனை வழிமறித்து அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்து கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார். அப்போது, அவரிடம் இருந்த ரூ.500-ஐ சுரேஷ் பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிந்து, சுரேசை கைது செய்து, நெல்லை தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ்குமார் குற்றம் சாட்டப்பட்ட சுரேசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ரஞ்சித்ராஜ் ஆஜரானார்.