நீலகிரியில் புலிகள் உயிரிழந்த விவகாரம்: 20 பேர் கொண்ட வனக்குழுவினர் விசாரணை


நீலகிரியில் புலிகள் உயிரிழந்த விவகாரம்: 20 பேர் கொண்ட வனக்குழுவினர் விசாரணை
x
தினத்தந்தி 10 Sept 2023 11:26 AM IST (Updated: 10 Sept 2023 12:01 PM IST)
t-max-icont-min-icon

புலிகள் உயிரிழந்தற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி,

ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு அருகில் நேருநகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நீலகிரி வன அதிகாரி கவுதம், ஊட்டி தெற்கு வனச்சரகர் கிருஷ்ணகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புலிகள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புலிகள் உயிரிழப்பு தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி வனக்கோட்ட தலைமையிட மாவட்ட அலுவலர் தேவராஜ் தலைமையில் ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் மற்றும் ஊட்டி தெற்கு வனசரக அலுவலர் (பொறுப்பு) சசிகுமார் மேற்பார்வையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனகாவலர்கள் என 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சம்பவ இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது எப்படி இறந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று (9.9.2023) மாலை 4.30 மணியளவில் அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் பணியாளர்கள் தெரிவித்தனர். உடனடியாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவரது தகவலின்படி, இரண்டும் பெண் புலிகள். வாய்க்காலில் ஒன்று இறந்து கிடக்கிறது. மற்றொன்று வாய்க்காலின் மேல் கரையில் இறந்து கிடக்கிறது. இரண்டு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் இரண்டும் இறந்திருக்கலாம்.

வனத்துறை அதிகாரி தேவராஜ் தலைமையில் 20 பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை தணிக்கை செய்து வருகிறது. இந்த இரண்டு புலிகளும் விஷம் கலந்த தன்ணீரை குடித்து இறந்திருக்கலாமோ என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி இன்று 10.9.2023 பிரேத பரிசோதனை செய்யப்படும். மூன்று வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இரண்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story