நெல்லை கண்ணன் மரணம்


நெல்லை கண்ணன் மரணம்
x

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் நேற்று மரணம் அடைந்தார். நெல்லையில் அவரது உடலுக்கு அமைச்சர்கள், வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் நேற்று மரணம் அடைந்தார். நெல்லையில் அவரது உடலுக்கு அமைச்சர்கள், வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை கண்ணன்

பிரபல இலக்கிய பேச்சாளரும், 'தமிழ்க்கடல்' என்று அழைக்கப்பட்டவருமான நெல்லை கண்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.

நெல்லை கண்ணன் காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் நேற்று மரணம் அடைந்தார்.

சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களில் பேசி வந்தார்.

தமிழக அரசு விருது

தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றார். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 'குறுக்குத்துறை ரகசியங்கள்' என்ற பெயரில் 2 புத்தகங்கள், கவிதை நறுக்குகள், மரபு கவிதை, புதுக்கவிதை நூல்கள் எழுதி உள்ளார். மேலும், பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 1977-ம் ஆண்டு, 1989-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்டார். 1996-ம் ஆண்டு தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து களம் கண்டு தோல்வி அடைந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் சுரேஷ் கண்ணன் என்ற சுகா சினிமா இயக்குனராகவும், 2-வது மகன் ஆறுமுகம் கண்ணன் தனியார் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

அமைச்சர்கள் அஞ்சலி

நெல்லை கண்ணன் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அவரது உடலுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், 'நெல்லை கண்ணன் மறைவு செய்தி கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து வருத்தம் அடைந்தார். அவர் உடனே எங்களை நெல்லைக்கு சென்று நெல்லை கண்ணன் உடலுக்கு மரியாதை செலுத்த உத்தரவிட்டார். அதன்படி நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். தமிழில் சிறந்த மேடை பேச்சாளராகவும், இலக்கியவாதியாகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தவர் நெல்லை கண்ணன். அவரது மறைவு தமிழ்நாட்டுக்கு பெரிய இழப்பாகும்' என்றார்.

அப்போது கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

வைகோ அஞ்சலி

நெல்லை கண்ணன் உடலுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமயம், இலக்கிய சொற்பொழிவாற்றுவதில் ஈடுஇணையற்ற தீரராய் திகழ்ந்தவர் நெல்லை கண்ணன். நெல்லை என்று சொன்னால் கண்ணனையும் சேர்த்து சொல்லும் அளவுக்கு புகழ் வாய்ந்தவராக வாழ்ந்தவர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவரது வீட்டுக்கு வந்துள்ளார். காமராஜரை தலைவராக நேசித்தார்.

அவரது மறைவு அதிர்ச்சியை கொடுத்தது, இலக்கிய சமய உலகுக்கு இழப்பு. அரசியல் வாழ்வில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரை எல்லோரும் மதித்தார்கள். அவர் மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் இலக்கிய உலகிற்கும், தமிழுக்கும் இழப்புதான். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. சார்பில் நெல்லை கண்ணன் உடலுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று இறுதி சடங்கு

நெல்லை கண்ணன் உடலுக்கு நெல்லை மாநகர மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரது உடல் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் கருப்பந்துறைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.


Next Story