நல்லம்பள்ளி அருகேஏரியில் மூழ்கி அக்காள், தங்கை பலி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அக்காள், தங்கை பலியாகினர்.
தண்ணீரில் மூழ்கினர்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி (வயது 41). தர்மபுரியில் அச்சகம் நடத்தி வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சஞ்சனா (8), மோனிகா (6) என்ற மகள்களும், தமிழ் இனியன் (3) என்ற மகனும் இருந்தனர். தம்மனம்பட்டி அரசு பள்ளியில் சஞ்சனா 3-ம் வகுப்பும், மோனிகா 1-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அக்காள், தங்கை, தம்பி ஒரு சைக்கிளில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். பின்னர் தமிழ் ்இனியனை கரையில் அமர வைத்துவிட்டு அக்காள், தங்கை ஏரியில் இறங்கி குளித்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் 2 பேரும் கரைக்கு வராததால் தமிழ் இனியன் அழுதுகொண்ட வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறினான்.
சோகம்
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஏரிக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் மற்றும் தர்மபுரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி தேடலுக்கு பின்னர் சஞ்சனா மற்றும் மோனிகாவை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறை நாளில் ஏரிக்கு குளிக்க சென்ற அக்காள், தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.