யானை தாக்கி விவசாயி பலி
பர்கூர் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.
பர்கூர்:
பர்கூர் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள காளிகோவில் கிராமம் பொம்மதேசகொல்லை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி வீரம்மா (50). இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் மாலை தங்களது நெல் வயலுக்கு காவலுக்கு சென்றனர்.
அப்போது வயலில் உள்ள தென்னை மரத்தடியில் லட்சுமணன் படுத்திருந்தார். இரவு அந்த வழியாக காட்டு யானை ஒன்று வந்தது. பின்னர் யானை லட்சுமணன் படுத்திருந்த தென்னை மரத்தடிக்கு சென்றது. அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த லட்சுமணன் யானையை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதற்குள் யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசி மிதித்தது.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீரம்மா சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு பக்கத்து வயலில் படுத்திருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் யானை அங்கிருந்து சென்று விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கந்திகுப்பம் போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.