எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை ஜூலை 12ம் தேதி வரை சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு ஜூன் 28ம் தேதி தொடங்கியது. ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.