இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு
இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது.
கோட்டைப்பட்டினம்:
கோட்டைப்பட்டினம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இதுகுறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த வனத்துறையினர் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை கைப்பற்றி அதே பகுதியில் புதைத்தனர். மேலும் கடல் பசு எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவின் ஒரு பகுதி அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் இருந்தது போல் தெரிகிறது. இதனால் யாரேனும் உணவிற்காக சதையை அறுத்து எடுத்துவிட்டு கடல் பசுவை அப்படியே கடலில் தூக்கி வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், கடல் பசு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். கடல் பசுவை வேட்டையாடுவது சட்ட விரோதமான செயலாகும். இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.