காவிரி ஆற்றில் செத்து மிதந்த மீன்கள்
காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தன. பாறைகளுக்கு வெடி வைத்ததால் இறந்ததா? என மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மாவட்டம் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி, ஊராட்சிகோட்டை நீர்மின் நிலையங்களை கடந்து திருச்சி, பூம்புகார் வரை செல்கிறது. இந்த கதவணை நீர்த்தேக்க பகுதிகளில் ஆண்டுதோறும் தண்ணீர் கடல் போல காட்சியளிக்கும். இதில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கோனேரிபட்டி நீர்மின் தேக்க பகுதிகளுக்கு சிலர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றின் கரையோரத்தில் மீன்கள் செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம் வரை காவிரி ஆற்றில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கியதை பார்க்க முடிந்தது.
அச்சம்
காவிரி ஆற்றில் ஏதேனும் ரசாயன கலவைகள் கலந்துள்ளதா? அல்லது சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காட்டூர் பகுதி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைப்பதற்காக பாறைகளுக்கு வெடி வைக்கின்றனர்.
அதனால் மீன்கள் செத்து மிதக்கின்றனவா? என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.