ஈரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
ஈரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி நஞ்சனாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ். இவருடைய மனைவி கமலா (வயது 54). இவர் நஞ்சனாபுரம் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று பகல் 11 மணிஅளவில் வேலைக்கு செல்வதற்காக சின்னமேடு நஞ்சனாபுரம் செல்லும் சாலையில் தங்கம் நகர் பகுதியில் கமலா நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்தனர். அவர்கள் கமலாவுக்கு அருகில் வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அதற்கு அவர் பதில் அளித்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த நபர், திடீரென கமலா அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலா கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் 2 பேரும் நகையுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் கமலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நகையை பறித்தவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? அவர்கள் எந்த வழியாக தப்பி சென்றனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.