'நீட்' தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள்: முதல்-அமைச்சர் பேச்சு


நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள்: முதல்-அமைச்சர் பேச்சு
x

‘நீட்' தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தனது சொந்த தொகுதிக்கு சென்றார். அங்கு, புனரமைக்கப்பட்ட ஆனந்தன் பூங்காவை திறந்துவைத்து, திரு.வி.க. நகர் பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணி மற்றும் 20 மறு சீரமைப்பு பணிகளை தொடங்கிவைத்தார். மேலும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் தையல் எந்திரங்களை அவர் வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி

நம்முடைய கொளத்தூர் தொகுதியில் இருக்கின்ற இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றிடவேண்டும் என்கின்ற அந்த நோக்கத்தோடுதான், இந்த அகாடமியை, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்கிற பெயரில் நாம் தொடங்கினோம்.

நான் ஒவ்வொரு முறையும் இங்கே வந்து, இந்த நிகழ்ச்சியில் எல்லாம் கலந்துகொண்டு, உங்களை எல்லாம் பார்த்து, இந்த உதவிகளை வழங்குகிறபோது, இங்கே படித்ததால் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளை பற்றி சொல்கிறபோது, மறைந்த நம்முடைய அருமை தங்கை அனிதாவைதான் ஒவ்வொரு முறையும் நான் நினைத்து பார்ப்பதுண்டு.

உண்மையான அஞ்சலி

'நீட்' என்ற கொடுமையான தேர்வுக்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ, அன்றைக்குதான் நாம் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தக்கூடிய நாளாக அது அமைந்திடமுடியும். 'நீட்'டுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீபத்தில் மறைவெய்திய ஜெகதீஸ்வரன் வரைக்கும் அந்த மாணவச் செல்வங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

நம்முடைய அனிதா பெயரில் அச்சீவர்ஸ் அகாடமி தொடங்குவதில் இருந்து, டேலி படிப்பைப் பொறுத்தவரையில், இதுவரை 9 கட்டங்கள் முடித்து, 743 மாணவிகள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். ஆண்களில், இதுவரை 5 கட்டங்கள் முடித்து, 381 மாணவர்கள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு, மேலும் 136 மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட இருக்கிறது.

இலவச தையல் எந்திரம்

தையல் பயிற்சியை பொறுத்தவரை, இதுவரை 5 கட்டங்களில் 1,467 பெண்கள் இலவச பயிற்சி முடித்து, சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் எந்திரம் பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு 6-வது கட்டமாக 359 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் எந்திரம் வழங்கப்பட இருக்கிறது.

தற்போது, 491 மாணவ-மாணவிகள் டேலி மற்றும் தையல் பயிற்சியை பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சிகளை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்துக்கொண்டு வருகிறது. பட்டப்படிப்புடன் சேர்ந்து இதுபோன்ற தனித்திறமைகள் இருந்தால்தான் வளர முடியும். அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

கனவு திட்டம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், தனித்திறமை கொண்டவர்களாகவும் வளரவேண்டும். அதற்காகத்தான் "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். இது என்னுடைய கனவு திட்டம். ஆண்டுக்கு, 10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டோம். எவ்வளவு? ஆண்டிற்கு 10 லட்சம் பேருக்கு திட்டமிட்டோம்.

ஆனால் கடந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைத்துக்கொண்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின் பொருளாதாரத் தற்சார்பை உறுதிப்படுத்தக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்னும் 3 நாட்களுக்குள், வருகின்ற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று, அவர் பிறந்த காஞ்சீபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.

இந்த திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, அதாவது செலவை எல்லாம் கூட நாங்கள் செலவினங்களாக பார்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக நாங்கள் பார்க்கின்றோம். சொல்லப்போனால், இந்த திட்டத்தின் மூலமாக உதவித்தொகை கொடுக்கவில்லை; உரிமையை கொடுக்கின்றோம்.

பல தலைமுறைகள் பயனடையும்

இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடி குடும்பங்கள். இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story