தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி விடுமுறை? - தமிழக அரசு பரிசீலனை


தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி விடுமுறை? - தமிழக அரசு பரிசீலனை
x

தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக 25, 26-ந்தேதிகளில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு முன்பதிவும் நடந்து வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு துறைகளும் செயல்படுகிறது.

தீபாவளி விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அரசு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி விடுமுறை விடலாமா? என்று தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த விடுமுறையை நவம்பர் 12-ந்தேதி இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலைநாளாக அறிவிக்கலாம் எனவும் அரசு ஆலோசித்து வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2 ஆண்டுகள் தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை விடப்பட்டு தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊரில் இருந்து திரும்ப வசதியாக இருந்தது. அதுபோல இந்த ஆண்டும் விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.


Next Story