2-வது நாள் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையே 2-வது நாள் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு போட்டிகள்
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். முதல் நாளில் 10 ஆயிரம் மீட்டர், 1,500 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது.
2-வது நாளான நேற்று பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆயுதப்படை போலீஸ் பூமகள், முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். 10 கிலோ மீட்டர் நடை போட்டியில் சென்னை பெருநகர போலீஸ் கிருத்திகா முதல் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் மேற்கு மண்டல போலீஸ் வளர்மதி முதல் இடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் சென்னை பெருநகர போலீஸ் வர்சா முதல் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மேற்கு மண்டல போலீஸ் நிவேதிதா முதல் இடமும், சுத்தியல் வீசுதல் போட்டியில் மேற்கு மண்டல போலீஸ் வைஷ்ணவி முதல் இடமும், ஹெப்டத்லான் போட்டியில் சென்னை பெருநகர போலீஸ் வேம்பரசி முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
ஆண்களுக்கான போட்டி
ஆண்களுக்கான விளையாட்டு போட்டியில் 20 கிலோ மீட்டர் நடை போட்டியில் பிரபாகரன் முதல் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ் மணிகண்டன் முதல் இடமும், 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் ஆயுதப்படை போலீஸ் அன்புசெழியன் முதல் இடமும், கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் சென்னை பெருநகர போலீசார் சந்தோஷ்குமார், சுத்தியல் வீசுதல் போட்டியில் மேற்கு மண்டல போலீஸ் கோபிநாத் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தனர். இன்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.