சுசீந்திரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
நாகர்கோவில்,
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்தினருடன் கன்னியாகுமரி வந்தார். அவரை அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து மாலையில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனி படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்பி ஓய்வு எடுத்தார்.
சூரியோதயத்தை பார்த்தனர்
அதைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்தினர் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கவில்லை. பின்னர் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் கவர்னர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் புறப்பட்டு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு வந்தனர்.
குடும்பத்துடன் சாமி தரிசனம்
கவர்னர் ஆர்.என். ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தன்னுடைய குடும்பத்தினருடன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, நவகிரக மண்டபம், இசை தூண்கள், தாணுமாலய சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
அப்போது கோவில் ஸ்தல வரலாற்றை கோவில் பணியாளர்கள் நல்லசிவம் மற்றும் குமார் ஆகியோர் இந்தி மொழியில் விளக்கினர். அப்போது மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், பொறியாளர் ராஜ்குமார், கணக்கர் கண்ணன் உள்பட அரசு அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனா்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் காலை 9.20 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையை வந்தடைந்தனர். பின்னர் 10.40 மணிக்கு அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கவர்னரும், அவருடைய குடும்பத்தினரும் விவேகானந்தா கேந்திராவுக்கு சென்றனர். கேந்திராவில் உள்ள பாரதமாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் மதியம் உணவு சாப்பிட்டனர். அதைத்தொடர்ந்து பிற்பகல் 2.20 மணிக்கு காரில் கவர்னரும், அவருடைய குடும்பத்தினரும் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றனர்.