பழனி முருகன் கோவிலில் தரிசன கட்டுப்பாடு


பழனி முருகன் கோவிலில் தரிசன கட்டுப்பாடு
x
தினத்தந்தி 17 Oct 2023 4:45 AM IST (Updated: 17 Oct 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு போடுதல் நிகழ்ச்சி வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் பழனி மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பாடாகி பெரியநாயகி அம்மன் கோவில் செல்கிறது. எனவே அன்று மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

இந்நிலையில் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், நவராத்திரி விழாவில் அம்பு போடுதல் நிகழ்ச்சி 23-ந்தேதி நடப்பதால் அன்றைய தினம் பக்தர்களுக்கு தரிசன கட்டுப்பாடு உள்ளது. அதாவது அன்று காலை 11.30 மணிக்கு பிறகு அனைத்து தரிசன கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். எனவே படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றில் வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை. தொடர்ந்து அடுத்த நாள் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.


Next Story