சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடியில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் அந்த பகுதி மக்கள் அரசு உதவி திட்டங்கள் மற்றும் அரசு சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவரங்கள் பெற்று வருகின்றனர். மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள் பெறுவதற்கு அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.
சிமெண்டு காரைகள் பெயர்ந்து
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மழை காலங்களில் தண்ணீர் அலுவலகம் உள்ளே சென்று ஆவணங்கள் சேதமடையும் நிலை உள்ளது. மழை காலங்களில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்த பகுதி மக்கள் அலுவலகம் உள்ளே நிற்க கூட முடியாத நிலை உள்ளது.
சீரமைக்க வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.