"சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்களையும் இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள எஸ்.களபம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நேற்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் பரத் என்ற நான்காம் வகுப்பு மாணவர் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் 9,573 பள்ளிகளில் உள்ள 13,036 கட்டிடங்கள் பழுதடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்ததால், அவை அனைத்தையும் இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் திட்டம்.
ஆனாலும் கூட, கடந்த மே மாதம் வரை 3,482 பள்ளிகளில் 4,808 பழுதடைந்த கட்டிடங்கள் மட்டும் இடிக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 6,033 பள்ளிகளில் உள்ள 8,228 கட்டங்கள் இடிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசால் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். அவை மட்டுமின்றி, சேதமடைந்துள்ள மற்ற கட்டிடங்களையும் உடனடியாக அடையாளம் கண்டு அவற்றுக்குப் பதிலாக புதிய கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.